நான் நினைத்து பார்த்ததில்லை, 19 வயதேயான தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவன் மிகவும் முக்கியமான பாடம் ஒன்றை எனக்குக் கற்பிப்பான் என்று. ஆனால் அவன் செய்தான். நமக்கு அறிமுகமில்லாத எவரைப் பற்றியும் கருத்துகள் ஏதும் கொள்ளக் கூடாது என்று அவன் எனக்கு கற்பித்தான். ஜூலை 2005, ஒரு வியாழக்கிழமை காலை, முன்பின் அறிந்திராத அந்த தீவிரவாதியும் நானும், ஒரே ரயில் பெட்டியில் ஒரே நேரத்தில் பயணம் செய்வதற்காக ஏறினோம், ஒருசில அடிகளேயான இடைவெளியில் நின்று கொண்டிருந்திருப்போம். அவனை நான் கவனிக்கவில்லை. எவரையுமே நான் கவனிக்கவில்லை. சுரங்க இரயிலில் நாம் எவரையும் கவனிப்பதில்லையே. ஆனால் அவன் என்னை கவனித்திருப்பான். அந்த வெடியை வெடிக்கவைக்கும் பொத்தானை அமுக்கச் செல்கையில் எங்கள் அனைவரையும் அவன் கவனித்திருப்பான். அவன் என்ன தான் நினைத்துக் கொண்டிருந்தான் என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன். குறிப்பாக அந்த கடைசி விநாடிகளில். தனிப்பட்ட பகை ஏதும் இதில் இல்லை என்று எனக்குத் தெரியும். அவன் ஜில் ஹிக்ஸ் எனும் இந்தப் பெண்ணைக் கொல்வதற்காகக் கிளம்பவில்லை. அவனுக்கு என்னைத் தெரிந்திருக்காது. வாய்ப்பேயில்லை. ஆனால் அவன் எனக்கு அளித்தது சற்றும் பொருத்தமற்ற, தேவையற்றற அடையாளம் ஒன்றினை. "எதிரி" என்ற அடையாளமே அது. அவனைப் பொறுத்தவரை நான் ஒரு "அன்னியன்," "எங்கள்" மக்களுக்கு எதிரான "அவர்கள்." எங்களை எதிரிகளாகப் பார்த்த அவனால் மனிதர்களாகப் பார்க்க முடியவில்லை. அந்த வெடியின் பொத்தானை அவன் அமுக்கச் செய்தது அதுவே. அவன் எவரையும் குறிவைக்கவும் இல்லை. பெட்டியிலிருந்த இருபத்தாறுபேர் தம் விலைமதிப்பற்ற உயிரை இழந்தனர், நானும் கூட உயிரிழந்திருப்பேன். ஒரு உள்மூச்சு எடுக்கும் தருணத்திற்குள் ஒரு கரிய இருள் எங்களை ஆட்கொண்டது மிக அடர்த்தியான இருள் அது; கரிய அடர்ந்த தாரில் நீந்துவது போலிருந்தது. நாங்கள் எதிரிகள் என்று நாங்கள் அறியவில்லை. எங்கள் மட்டில், நாங்கள் வெறும் பயணிகள், ஒருசில நிமிடங்களுக்கு முன்புவரை, சுரங்க இரயில் வழக்கங்களை கடைபிடித்த பயணிகள்: கண்ணோடு கண் நாங்கள் பார்க்கவில்லை, பேசிக்கொள்ளவில்லை, எந்த ஒரு உரையாடலும் இல்லவே இல்லை. ஆனால், அந்த காரிருள் எங்களை நீங்கியபோது, நாங்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டோம் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டோம். ஒவ்வொருவரும் தம் பெயரை உரக்கக் கூறினோம், வருகைப் பதிவு உரைப்பது போல, பதில் ஏதும் வருமா என எதிர்பார்த்து உரைத்தோம். "நான் ஜில், இங்கே உள்ளேன். உயிருடன் உள்ளேன். ஓகே." "நான் ஜில். இங்கே. உயிருடன் உள்ளேன். ஓகே." அலிசன் எனும் பெண்ணை அதற்கு முன்பு எனக்குத் தெரியாது. ஆனால், சில நிமிடங்களுக்கு ஒருமுறை அவள் குரலெழுப்பும்போதும் அதை கவனித்தேன். ரிச்சர்டை எனக்குத் தெரியாது. ஆனால் அவர் உயிர்பிழைப்பது எனக்கு முக்கியமாயிருந்தது. அவர்களுடன் என்னைப் பற்றி பகிர்ந்துகொண்டதெல்லாம் என் முதற்பெயர் மட்டுமே. டிசைன் கவுன்சிலில் நான் ஒரு துறைத் தலைவர் என்று அவர்களுக்குத் தெரியாது. இதோ, இதுதான் என்னருமை பை, அன்று இதுவும் மீட்கப்பட்டது. கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆய்விதழ்களில் நான் எழுதியுள்ளேன் என்று அவர்களுக்குத் தெரியாது, ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸில் நான் ஆய்வாளர் என்றும் தெரியாது, கருநிற உடைகளை அணிவேன் என்றும் -- இப்போதும் அணிகிறேன் -- நான் புகைபிடிப்பேன் என்றும் அவர்களுக்குத் தெரியாது. இப்போதெல்லாம் நான் புகைபிடிப்பதில்லை. ஜின் குடித்து TED உரைகளைப் பார்ப்பேன், அப்போது கற்பனையும் செய்ததில்லை, ஒருநாள் இவ்வாறு செயற்கைக் கால்களில் நின்றுகொண்டு உரை நிகழ்த்துவேன் என்று. இலண்டன் நகரில் செயற்கரிய காரியங்கள் செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய இளம்பெண் நான். அவை எல்லாமே முடிந்துவிடும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது பிழைக்கவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன், என் கால்களில் மேல்பகுதியச் சுற்றி குருதியடக்கும் கட்டு கட்டினேன், வெளியில் எதையும் எவரையும் கவனிக்காமல் என்னுள்ளே கவனம் செலுத்தினேன், என் உள்ளுணர்வால் மட்டுமே வழிநடத்தப்பட்டேன். மூச்சு விடும் வேகத்தைக் குறைத்தேன். தொடைகளை உயர்த்தினேன். நிமிர்ந்து நேராக அமர்ந்தேன், கண்ணிமைகள் மூடிக்கொள்வதைத் தடுக்கப் போராடினேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை இப்படியே கடத்தினேன், அந்த ஒரு மணி நேரத்தில், அதுவரையிலான என் வாழ்க்கை முழுவதையும் திரும்பிப் பார்த்தேன். அதுவரை நான் செய்தவற்றை விட அதிகமாகச் செய்திருக்கலாம். அதிகமாக வாழ்ந்திருக்கலாம், அதிக இடங்களைப் பார்த்திருக்கலாம். ஓட்டப்பயிற்சி செய்திருக்கலாம், நடனமோ யோகமோ பழகியிருக்கலாம். ஆனால் என் கவனம், குறிக்கோள் எல்லாமே என் பணியிலேயே இருந்தது. பணி செய்வதற்காகவே வாழ்ந்தேன். தொழிலட்டையில் என் பெயரும் பணிநிலையுமே எனக்கு முக்கியமாயிருந்தது. ஆனால் அந்தச் சுரங்கத்தினுள் அது முக்கியமாகத் தெரியவில்லை. எங்களை மீட்க வந்த மீட்பாளர் ஒருவரின் கை முதன்முறையாக என்னைத் தொடுவதை நான் உணர்ந்த போது, என்னால் எதுவும் பேச இயலவில்லை, "ஜில்" என்ற ஒரு சிறு சொல்லையும் என்னால் சொல்ல இயலவில்லை. என் உடலுடன் முற்றிலுமாக அவர்களிடம் சரணடைந்தேன். அதுவரை இயன்றதெல்லாம் செய்த நான் இப்போது அவர்கள் கையில். எனக்கு ஒரு புரிதல் வந்தது, மனித நேயம் என்றால் உணமையில் யார் என்ன என்று, மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டபோது எனக்கு அளிக்கப்பட்ட அடையாள அட்டையை முதன் முதலில் பார்த்த போது புரிந்தது. அதில் எழுதியிருந்தது: "அடையாளம் காணப்படாத, பெண் எனக் கருதப்படும் ஒருவர்." அடையாளம் காணப்படாத, பெண் எனக் கருதப்படும் ஒருவர். அவ்வார்த்தைகள் எனக்குக் கிடைத்த பரிசு என நான் கருதுகிறேன். அவ்வார்த்தைகள் எனக்குத் தெளிவாய்ச் சொன்னது இது தான்: என் வாழ்க்கை காப்பாற்றப்பட்டதற்கு ஒரே காரணம் நான் ஒரு மனிதர் என்பது மட்டுமே. வேறெந்த வேறுபாடுகளும் அங்கே முக்கியமில்லை, மீட்பாளர்கள் மேற்கொண்ட அனைத்து அரிய முயற்சிகளுக்கும், என் உயிரைக் காப்பதற்காக, முடிந்தளவு அத்தனை உயிர்களையும் காப்பாற்றுவதற்காக உயிரையும் பணயம் வைத்த அவர்களுக்கு முக்கியமேயில்லை. நான் ஏழையா அல்லது வசதி படைத்தவளா என்பது அவர்களுக்கு முக்கியமில்லை, என் தோலின் நிறம் முக்கியமில்லை, நான் ஆணா அல்லது பெண்ணா, என் பாலியல் உணர்வுகள் எப்படிப்பட்டவை, நான் யாருக்கு வாக்களித்தேன், நான் கல்வி கற்றவளா, நான் இறை நம்பிக்கை கொண்டவளா அல்லது கொண்டிராதவளா. எதுவுமே அவர்களுக்கு முக்கியமில்லை, நான் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர் என்பதனைத் தவிர. நான் இன்று வாழ்வதே இதற்கு சான்று. நிபந்தனையற்ற அன்பும் மதிப்பும் உயிரைக் காப்பது மட்டுமல்ல, வாழ்வையே மாற்றும் என்பதற்கு என் அனுபவமே சான்று. இதோ, என்னை மீட்டவர்களுள் ஒருவரான ஆண்டியும், நானும், சென்ற வருடம் எடுத்த படம். அந்நிகழ்வு நிகழ்ந்து பத்து வருடங்கள் கழித்து இதோ, நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். அந்நிகழ்வின்போது, அந்தக் குழப்பமான தருணங்களில் என் கை இறுகப் பிடிக்கப்பட்டிருந்தது. என் முகம் இதமாக வருடப்பட்டது. நான் உணர்ந்தது என்ன? நான் உணர்ந்தது அன்பினை. பழி தீர்க்கும் எண்ணம் ஏதும் என்னுள் வராமல் பாதுகாத்தது, 'இது என்னுடனே முடியட்டும்' என்று நான் சொல்லுவதற்குத் துணிவைக் கொடுத்தது, அன்பு மட்டுமே. நான் உணர்ந்த அந்த அன்பு. ஆக்கப்பூர்வமான மாற்றங்களை பரவலான முறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மாபெரும் அளவில் உள்ளது என்பது என் நம்பிக்கை. ஏனென்றால், நம்முடைய ஆற்றல் என்ன என்பது எனக்குத் தெரியும். மனித இனத்தின் சக்தி என்னவென்பதை நான் அறிவேன். என்னுள் பல பெரிய சிந்தனைகளை இது எழுப்புகிறது, நமக்குள் நாமே கெட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகளையும் எழுப்புகிறது: நம்மை இணைக்கும் இந்த ஒற்றுமை நம்மிடையே உள்ள எந்தத வேற்றுமையையும் விட மிகப் பெரியது அல்லவா? ஒரு பேரிடரோ, துன்ப நிகழ்வோ நிகழ்ந்தால் மட்டுமே நாம் ஒன்றுபடுவோமா? ஒரே இனம் என ஆழமாக உணர்வோமா? நாம் அனைவரும் மனிதர் என்று உணர்வோமா? காலம் உணர்த்தும் அறிவை ஏற்றுக் கொண்டு சகிப்புத்தன்மை எனும் நிலையையும் தாண்டி நமக்கு அறிமுகமில்லாதவர்களும் மனிதர்களே எனும் இந்த ஒற்றுமையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வது எப்போது? நன்றி. (கரவொலி)