(இசை) [வடமொழி] இது தேவி அம்மனை போற்றும் துதி. இந்தியர்களில் பலர் இதனை சிறு வயதிலேயே கற்கின்றோம். இதனை நான் கற்ற போது எனக்கு வயது நான்கு, என் தாயின் மடியில் அமர்ந்து கற்றேன். அதே வருடம் அவர் எனக்கு நாட்டியத்தையும் அறிமுகம் செய்தார். இப்படித்தான் தொடங்கியது நாட்டியத்துடனான என் பயனம். அது முதல், இப்போது நாற்பது வருடங்களுக்கு மேலாக, பல மேன்மையான கலைஞர்களிடம் கற்றுள்ளேன், உலகம் முழுவதும் நடனமாடியுள்ளேன், பல்வேறு வயதினருக்கு கற்பித்துள்ளேன், நிகழ்ச்சிகள் படைத்துள்ளேன், வடிவமைத்துள்ளேன், இப்படி நாட்டியக் கலையில் என் சாதனைகளுக்காக கிடைத்தன பல விருதுகள். இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல் 2007ம் வருடம் நாட்டின் நான்காம் உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ விருது எனக்கு வழங்கப்பட்டது, கலைக்கான என் பங்களிப்புக்காக. (கைதட்டல்) ஆனால் எதுவுமே, எதுவுமே என்னை தயார்படுத்தவில்லை, நான் கேட்கவிருந்த செய்திக்காக, ஜூலை 1, 2008 அன்று எனக்கு கிடைத்த செய்தி. என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தை, "carcinoma". ஆம், மார்பக புற்றுநோய். அதிர்ச்சியால் வாயடைத்துப் போய் மருத்துவமனையில் நான் அமர்ந்திருந்த போது, மேலும் சில வார்த்தைகள் என்னிடம் சொல்லப்பட்டது, "cancer" (புற்றுநோய்), "stage," "grade." அதுவரை என்னைப் பொறுத்தவரை, 'cancer' என்பது என் நண்பரின் ராசி, 'stage' என்பது நான் நடனமாடும் மேடை, 'grade' என்பது நான் பள்ளியில் வாங்கிய மதிப்பெண்கள். அன்று நான் உணர்ந்தது, நான் அழையாத, விரும்பாத வாழ்க்கைத் துணை எனக்கு வாய்க்கப் பட்டிருந்ததை. நாட்டியக் கலைஞரான எனக்கு நவரசம் எனப்படும் ஒன்பது வகை உணர்ச்சிகள் பற்றித் தெரியும்: கோபம், வீரம், வெறுப்பு, ஹாஸ்யம், மற்றும் பயம். பயம் அறிந்தவளாக என்னைப் பற்றி நினைத்திருந்தேன். ஆனால் அன்று தான் பயம் என்றால் என்னவென்று கற்றுணர்ந்தேன். மிகப்பெரிய இந்த அதிர்ச்சியை தாங்க இயலாமல், வாழ்க்கைப் பிடிப்பை இழந்து விட்ட ஓர் உணர்வுடன், கண்ணீர் மல்கினேன், பிறகு என் அருமை கணவர் ஜெயந்திடம் கேட்டேன். நான் கேட்டேன், "அவ்வளவு தானா? எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதா? என் நாட்டியத்துக்கு முடிவு நெருங்கிவிட்டதா?" நேர்மறை சிந்தனையாளரான அவர் சொன்னார், "இல்லை, இது ஒரு இடைவேளை மட்டுமே, சிகிச்சையின் போது ஒரு இடைவேளை, அதன் பிறகு நீ உன்னுடையதே ஆன வாழ்க்கைக்கு திரும்புவாய்." அப்போது எனக்கு புரிந்தது என்னவென்றால், என் வாழ்க்கை முழுவதுமே என் வசம் இருந்ததாக நினைத்திருந்த எனக்கு, வசப்பட்டது உண்மையில் மூன்றே மூன்று விஷயங்கள் தான்: என் எண்ணம், என் மனம் -- எண்ணங்கள் உருவாக்கும் காட்சிகள் -- இதிலிருந்து உய்க்கும் செயல். இப்படி நான் மூழ்கிப்போனேன் பல்வேறு உணர்ச்சிகளின் சுழலில், மனச் சோர்வில், நான் இருந்த நிலையின் பாரம் தாங்காமல், ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்ட நிலைக்கு செல்ல விரும்பினேன். நான் இருந்த அந்த நிலையிலிருந்து நான் விரும்பிய நிலைக்குச் செல்ல எனக்கு ஏதாவது ஒன்றின் உதவி தேவைப்பட்டது. இந்த நிலையிலிருந்த என்னை மீட்டெடுக்கக் கூடிய ஒன்று எனக்கு தேவைப்பட்டது. ஆகவே நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு, உலகத்திடம் இவ்வாறு பிரகடனம் செய்தேன் ... "இந்த புற்றுநோய் என் வாழ்வெனும் புத்தகத்தில் ஒரு பக்கம் தான், என் மொத்த வாழக்கையையும் இது பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன்." மேலும் நான் பிரகடனம் செய்தேன், இந்நிலையை நான் கடந்து செல்வேன், புற்றுநோய் என்னை மிதித்து செல்ல நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் நான் இருந்த நிலையில் இருந்து நான் விரும்பிய நிலைக்கு செல்ல, ஏதாவது ஒன்றின் துணை தேவைப்பட்டது. ஒரு நங்கூரம், ஒரு உருவகம், ஒரு பிடிமானம், அதை பிடித்துக் கொண்டு இந்நிலையிலிருந்து மீண்டெழ. அதை என் நடனத்தில் கண்டுகொண்டேன். என் நடனம், என் பலம், என் சக்தி, என் உவகை, என் உயிர் மூச்சு. ஆனால் அது எளிமையான காரியம் அல்ல. நம்புங்கள், அது எளிமையான காரியமே அல்ல. எப்படி ஒருவர் களிப்பு கொள்ள முடியும், மூன்றே நாட்களில் அழகான உருவம் வழுக்கைத் தலை உருவமாக மாறும் போது? எப்படி ஒருவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியும் வேதிச்சிகிச்சை (chemotherapy) உடலையே உலுக்கிப் போடும் போது? மாடிப் படி ஏறுவதே பெரும் போராட்டமாய் இருக்கும்போது, அதுவும் மூன்று மணி நேரம் தொடர்ந்து நடனமாடக் கூடிய என்னைப் போன்ற ஒருத்திக்கு? இது போன்ற துன்பகரமான நிலையில் திணறாமல் எப்படி இருக்க முடியும்? என்னால் முடிந்ததெல்லாம் சுருண்டுகொண்டு அழுவது மட்டுமே. ஆனால் கவலைக்கும் கண்ணீருக்கும் இடம் இல்லையென்று என்னிடமே நான் சொல்லிக் கொண்டேன். ஆகவே என்னை நானே என் நாட்டியக் கூடத்திற்கு இழுத்து சென்றேன், ஒவ்வொரு நாளும், என் உடல், மனம், ஆவி சகிதமாக என் நடனக் கூடத்திற்கு, சென்று நான் கற்றதையெல்லாம் திரும்பவும் கற்றேன், நான்கு வயதில் கற்றதெயெல்லாம் திரும்ப கற்றேன், அனைத்தையும் திரும்பக் கற்றேன். இது தாங்க முடியாத வலியாக இருந்தது, ஆனால் செய்தேன். கஷ்டம். முத்திரைகள் மீது கவனம் செலுத்தினேன், நடனம் உருவாக்கும் காட்சிகள் மீது, அதன் கவித்துவம், உவமைகள் மீது, மேலும் நடன தத்துவத்தின் மீதே கவனம் செலுத்தினேன். இப்படி மெதுவாக அந்த கவலை கொள்ளச் செய்யும் மனநிலையிலிருந்த வெளியேறினேன். ஆனால் அதற்கு மேலும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது. அந்த கடைசி தூரத்தை கடக்க உதவும் ஒன்று எனக்கு தேவைப்பட்டது. அதை நான் உருவகத்தில் கண்டுகொண்டேன், நான்கு வயதில் என் தாயிடமிருதந்து நான் கற்ற கதையில் உள்ள உருவகம். மஹிஷாசுர மர்த்தினி எனப்படும் துர்க்கையின் பாவனை. பயமற்ற துர்கா தேவி, இந்துக் கடவுள்களால் உருவாக்கப் பட்டவள் துர்க்கை, ஒளி பொருந்தியவள், அழகியவள், பதினெட்டு கைகளுடன் போருக்கு தயாராகி, சிம்ம வாகினியாய் மஹிஷாசுரனை அழிக்க போர்முனைக்குச் சென்றவள். ஆக்கப்பூர்வ பெண்மை சக்திக்கு துர்க்கை ஒரு எடுத்துக்காட்டு, அவளே சக்தி. பயமறியா துர்க்கை. துர்க்கையின் அந்த உருவத்தை அவளுடைய குணம், நடை, பாவனை அனைத்தையும் என்னுடையதாகவே ஆக்கிக்கொண்டேன். தொன்மம் காட்டிய இவ் உருவகத்தின் துணை கொண்டு, மேலும் நடனத்தின் மீதிருந்த உவகையையும் துணை கொண்டு என் நடனத்தின் மீது கூர்மையான கவனத்தை செலுத்தினேன். எப்படிப்பட்ட கூர்மையான கவனம் என்றால், அறுவை சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே நான் மீண்டும் நடனமாடினேன். வேதிச்சிகிச்சையும் ஊடுகதிர் சிகிச்சையும் நடந்த வேளையிலேயே நடனமாடினேன், என் மருத்துவருக்கே இது தொல்லையாக இருந்தது. வேதிச்சிகிச்சையும் ஊடுகதிர் சிகிச்சையும் நடந்த நாட்களுக்கு இடையிலேயே நடனமாடியதால் சிகிச்சையின் கால நிரலை மருத்துவர் மாற்ற வேண்டியிருந்தது, என் நாட்டிய நிகழ்ச்சிகளின் அட்டவணைக்கு ஏற்ப. நான் செய்தது என்னவென்றால் என் கவனத்தை புற்றுநோயிலிருந்து நாட்டியத்தின் மீது திசைதிருப்பினேன். ஆம், புற்றுநோய் என் வாழ்க்கையெனும் புத்தகத்தில் ஒரு பக்கம் மட்டுமே. என் கதை வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள், தடங்கல்கள், சவால்கள் இவற்றை எதிர்கொள்ளும் கதை. எண்ணத்தின் ஆற்றலை பறைசாற்றுவது என் கதை. நாம் எடுக்கும் முடிவுகளின் ஆற்றல் பற்றியது என் கதை. கவனம் கொள்வதின் ஆற்றல் பற்றியது. இது என்னவென்றால் நம் கவனத்தை நாம் மிகவும் விரும்பும் விஷயத்தின் மீது செலுத்தினால், புற்றுநோய் போன்ற பெரும் தடங்கல் கூட சிறியதாகிவிடுகிறது. என் கதை பாவனையின் சக்தியைப் பற்றியது. உருவகத்தின் சக்தியைப் பற்றியது. என்னுடைய பாவனை துர்க்கையினது, பயமறியா துர்க்கை. சிம்மநந்தினி என்றும் அவள் அழைக்கப்படுகிறாள், சிம்ம வாகனத்தை செலுத்திவளாதலால். அதுபோல் நான், என் மன உறுதியையும், விட்டுக் கொடுக்காத் தன்மையையும் வாகனமாய் கொண்டு, மருத்துகளை ஆயுதமாய் கொண்டு, சிகிச்சையை தொடர்கையில், புற்றுநோய் எனும் போர்முனைக்கு நான் சென்று, அயோக்கிய உயிரனுக்களை கட்டுப்படுத்துகையில், புற்றுநோயிலிருந்து மீண்டவளாக நான் அறியப்பட விரும்பவில்லை, நோயை வென்றவளாகவே அறியப்பட விரும்புகிறேன். இந்த நாட்டியப் படைப்பின் ஒரு பகுதியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் "சிம்மநந்தினி." (கைதட்டல்) (இசை) (கைதட்டல்)