கணினிகள் உண்மையில் மிகச் சிறப்பாகச் செய்கின்ற ஒரு விஷயம் கட்டளைகளை மீண்டும் நிகழ்த்துவது. ஒரு மனிதராக, ஒரே விஷயத்தை நீங்கள் தொடர்ந்து பல முறை செய்ய வேண்டியிருந்தால் உண்மையிலேயே நீங்கள் சலிப்படைந்து விடுவீர்கள். ஆனால் ஒரு கணினி ஒரே விஷயத்தை இலட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான முறைகள் கூட மீண்டும் செய்ய முடியும், அதை உண்மையிலேயே சிறப்பாகச் செய்ய அவை ஒருபோதும் சலிப்படைவதில்லை. உதாரணமாக, Facebook-இல் உள்ள ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என நான் விரும்பினால், அந்த மின்னஞ்சல்கள் அனைத்தையும் உண்மையில் நான் எழுத நினைத்தால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிடும். ஆனால் ஒரு சில வரிகள் கொண்ட குறியீட்டின் மூலம், Facebook-இல் உள்ள ஒவ்வொருவருக்கும் கணினி வாயிலாக நான் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிவிட முடியும். லூப்கள் இதற்கு உதவுகின்றன, இதனால் அவை மதிப்புமிக்கவையாக இருக்கின்றன, இவை கணினிகள் மிகச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஒன்றும் கூட. இந்த உதாரணத்தில் உங்கள் இலக்கு பன்றியைப் பெற பறவையை நகர்த்துவதாக இருக்கும். இப்போது இதை மிக எளிதாகச் செய்ய ”மீண்டும் செய்க” தொகுதியை நாம் பயன்படுத்தப் போகிறோம். பறவையை ஒவ்வொரு முறை பன்றியை நோக்கி ஓர் அடி எடுத்துவைக்கச் செய்வதற்கு கணினிக்கு “முன்னோக்கி நகர்த்து” என்ற கட்டளையை ஐந்து முறை கொடுப்பதன் மூலம் நீங்கள் இதைச் செய்ய முடியும். அல்லது எளிய முறையில் கணினியிடம் “முன்னோக்கி நகர்த்து” என்ற கட்டளையை ஒரு முறை சொல்லிவிட்டு, அதை 5 முறை “மீண்டும் செய்யுமாறு” சொன்னால், அதே விஷயத்தை அது செய்துவிடும். இதைச் செய்வதற்கு, உங்களுடைய “முன்னோக்கி நகர்த்து” கட்டளையை இழுத்து வந்து, “மீண்டும் செய்” தொகுதிக்கு உள்ளே அதை வைக்க வேண்டும். எத்தனை அடிகள் அது முன்னோக்கி வைக்க வேண்டும் எனச் சொல்ல, அதன் மீது கிளிக் செய்து அந்தத் தொகுதியை நீங்கள் எத்தனை முறை மீண்டும் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிட வேண்டும். இப்போது மேலும் ஒரு விஷயம் என்னவென்றால், “மீண்டும் செய்” தொகுதிக்குள் உங்கள் விருப்பத்திற்கேற்ப எத்தனை கட்டளைகள் வேண்டுமானாலும் நீங்கள் கொடுக்கலாம். எனவே இந்த உதாரணத்தில் முன்னோக்கி நகர்ந்து இடது புறம் திரும்புமாறு நீங்கள் சொல்கிறீர்கள், இதையே அது ஐந்து முறை செய்யும். சரி, சிறப்பான வேலை, மகிழ்ச்சியாக இருங்கள் :-)